சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடிய ஆசாமி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தேடுகிறார்கள்

நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்சை அணிந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடிய ஆசாமியை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-10-01 23:00 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 6–வது தெருவில் லட்சுமி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் வெள்ளை சட்டை, கறுப்பு பேண்டு அணிந்தபடி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் சாமி கும்பிட வந்தார்.

நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்சை அணிந்தபடி பயபக்தியுடன் கோவிலில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சுற்றிவந்து சாமி தரிசனம் செய்தார். திடீரென கோவில் நிர்வாகிகள் அலுவலக அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடினார்.

பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு செல்வதுபோல் நைசாக கோவிலுக்கு வெளியே சென்ற அவர், தனது மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து கோவில் நிர்வாகிகள் அலுவலக அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த விலை உயர்ந்த செல்போன் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், மர்ம ஆசாமி பயபக்தியுடன் சாமி கும்பிடுவதுபோல் கோவிலை சுற்றி வலம் வருவதும், பின்னர் தலையை குனிந்தபடியே கோவில் அலுவலக அறைக்குள் சென்று செல்போனை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்