10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-10-01 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் மற்றும் 17பி குற்றச்சாட்டு வழங்கி அரசு ஊழியரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி அரசு விதிகளுக்கு புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும். 21 மாத நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஒருமாத ஓய்வூதியம் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் இளவரசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் மாயவேலு, துணை தலைவர் ஆளவந்தார் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் வட்ட பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

இதேபோல் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மகேஸ்வரன், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், வட்ட பொருளாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்