மது அருந்தி மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக கூறி போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால், மனவேதனை அடைந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2019-09-30 23:15 GMT
மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 29). வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நண்பர்களுடைய செல்போனுக்கு நேற்று இரவு வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில், என்னுடைய பாட்டி இறந்ததால் பகலில் மது அருந்தி இருந்தேன். அவரை அடக்கம் செய்ததும் வீட்டில் குளித்துவிட்டு, இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தெற்குவாசல் பகுதியில் சென்றேன்.

அங்கு நின்ற போலீசார், என்னை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நான் மது அருந்தி இருப்பதாகவும், எனக்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் விதித்து, அதற்கான ரசீது கொடுத்தனர். இதுபற்றி விளக்கம் கேட்டதற்கு அங்கிருந்த போலீஸ்காரர் தனது செல்போன் எண்ணை ரசீதின் பின்பகுதியில் எழுதி கொடுத்தார். இந்த எண்ணில் நாளை விளக்கம் கேட்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.

என்னுடைய மாத வருமானமே 10 ஆயிரத்தை தொடவில்லை. அப்படி இருக்கும்போது இந்த அபராத தொகையை நான் எப்படி செலுத்த முடியும். அதுவும் கோர்ட்டிலோ, ஆன்லைன் மூலமாகவோ கூட செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்கும்படி கூறியுள்ளனர்.

இதன்மூலம் அவர்கள் மத்திய-மாநில அரசுகளின் உத்தரவுகளை கடைபிடிக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. எனவே மதுவில் விஷத்தை கலந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதை பார்த்த நண்பர்கள் உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மதுவில் விஷத்தை கலந்து அருந்தி மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஜெய்ஹிந்த்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்