தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டனர்.;
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தார். தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே சீனிவாசன், அவருடைய தாய் சின்னம்மா, மனைவி செல்வி மற்றும் 2 மகன்கள் ஆகிய 5 பேரும் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்க முயன்ற 5 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது தனக்கு சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர் அபகரித்து கொண்டார். அதை தட்டி கேட்டால் அடியாட்களை வைத்து தாக்குகிறார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக சீனிவாசன் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.