விளாத்திகுளம் அருகே மழைக்கு வீடு இடிந்து தொழிலாளி பலி
விளாத்திகுளம் அருகே மழைக்கு வீடு இடிந்து தொழிலாளி பலியானார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தார். இவருடைய மனைவி சாந்தாமணி (51). இவர்களுக்கு ராமஜோதி (29), உமாலட்சுமி (29) ஆகிய இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி, சென்னையில் வசித்து வருகின்றனர்.
எனவே, செல்லப்பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் சொந்த ஊரில் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் செல்லப்பாண்டியன் தனது வீட்டின் முன்பக்க திண்ணையில் படுத்து தூங்கினார். சாந்தாமணி மட்டும் வீட்டுக்குள் தூங்கினார். இரவு 12.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது.
அப்போது வீட்டின் முன்பக்க சுவர் திடீரென்று இடிந்து செல்லப்பாண்டியன் மீது விழுந்து அமுக்கியது. இதில் உடல் நசுங்கிய அவர் உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த சாந்தாமணி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் இருந்து செல்லப்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே செல்லப்பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, மழைக்கு வீடு இடிந்து பலியான செல்லப்பாண்டியன் குடும்பத்தினருக்கு சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர், மழையில் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டு, செல்லப்பாண்டியன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தினார்.