தலைவாசல் அருகே நிதிநிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது
தலைவாசல் அருகே, நிதி நிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தலைவாசல்,
தலைவாசல் அருகே மும்முடி பகுதியில் வசித்து வந்தவர் நிதிநிறுவன அதிபர் கொம்பாட்டி மணி (வயது 54). இவரை ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டி கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தலைவாசல் அருகே சம்பேரி பகுதியில் காரில் கடத்திச்சென்றது. பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
இது குறித்து மணியின் தம்பி துரைராஜ் தலைவாசல் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைவாசல் அடுத்த மும்முடி பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (53) என்பதும், தேசிய நெடுஞ்சாலைத்துறை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவராக உள்ள அவர் நிதிநிறுவன அதிபர் கொம்பாட்டி மணி கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியை சேர்ந்த வேலுதுரை (54) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதில் கைதான கோபாலகிருஷ்ணன் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.