பொள்ளாச்சி அருகே, சாலையின் தடுப்புச்சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது - வாலிபர் சாவு; 5 பேர் படுகாயம்
பொள்ளாச்சி அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைநதனர்.
பொள்ளாச்சி,
கோவையில் இருந்து மதுரையை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை பழனியை சேர்ந்த லட்சுமணன் (வயது 45) ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் செல்லப்பபாளையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது சாலையில் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரி செல்லும் வழியில் உடுமலை அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (29) பரிதாபமாக இறந்தார். டிரைவர் லட்சுமணன் (45), கண்ணமநாயக்கனூரை சேர்ந்த கண்டக்டர் சொக்கலிங்கம் (56), உடுமலையை சேர்ந்த மோகன் குமார் (45), மதுரையை சேர்ந்த பாஸ்கரன் (60), அய்யனார் (71) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். கண்டக்டர் சொக்கலிங்கம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட வில்லை. இதுவே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்தது.