என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடியாத ஏக்கம்: கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-30 22:30 GMT
போடி,

போடியை அடுத்துள்ள நாகலாபுரம் கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் தங்கி அங்கு வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராகேஷ்குமார் (வயது 19) போடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாயார் உடல்நிலை சரியில்லாததால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராகேஷ் குமார் தனது பாட்டி ராஜம்மாளுடன் நாகலாபுரத்தில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் ராகேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதை நேற்று காலை ராஜம்மாள் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து போடி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ராகேஷ்குமார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர அவர் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை. இதனால் அவரால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடிய வில்லை. பின்னர் போடியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. முதலாமாண்டு படித்து இருக்கிறார். எனவே என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை என ஏக்கத்துடன் இருந்து உள்ளார். இந்த மன வருத்தம் காரணமாக ராகேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார்.

இவ்வாறு தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்