உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பார்க்க வந்த அமெரிக்க என்ஜினீயர், தீக்குளித்து தற்கொலை குடியிருப்பின் மாடியில் உடல் கருகி கிடந்தார்

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்த என்ஜினீயர், குடியிருப்பின் மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-30 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை அண்ணாநகர் மேற்கு, டபிள்யூ பிளாக், சி.செக்டார், 20-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.ராய். இவருடைய மகன் எட்வர்ட் பிரதீப்குமார் (வயது 49). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் அங்கேயே குடியேறிவிட்டார்.

எட்வர்ட்டின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே அவர், தனது தாயை பார்க்க கடந்த ஜூலை மாதம் மனைவி, மகள்களை அமெரிக்காவில் விட்டுவிட்டு அவர் மட்டும் சென்னை வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அவர் சென்னையில் தங்கி இருந்து, தனது தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்ப்பது உள்ளிட்ட பணிகளை உடனிருந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில் எட்வர்ட்டின் தந்தை ஆர்.எஸ்.ராய், சென்னைக்கு வந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், மனைவி மற்றும் பிள்ளைகள் தனியாக உள்ளனர். தாயை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல் என்றார்.

அதற்கு எட்வர்ட், அமெரிக்கா செல்ல இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை. கிடைத்த உடன் சென்றுவிடுவதாக தந்தையிடம் கூறினார்.

இந்த நிலையில் நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் மாடிக்கு சென்றனர். அங்கு எட்வர்ட், தீயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவருக்கு அருகில் ஒரு கேனில் பெட்ரோலும், தீப்பற்ற வைக்கும் லைட்டரும் இருந்தது. எனவே அவர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற் கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, எட்வர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். அங்கிருந்த பெட்ரோல் கேன் மற்றும் லைட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயின் உடல் நலம் குணமாகாத விரக்தியில் எட்வர்ட், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்