அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-30 22:45 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குள் வேளாண்மை அலுவலகம், வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பணிக்கு வந்துசெல்கின்றனர். மற்றும் மேற்கண்ட அலுவலகங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இவ்வாறு பல அதிகாரிகள் வந்துசெல்லும் இப்பகுதியில் சுகாதாரக்கேடு நிறைந்து காணப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் செல்ல 2 நுழைவுவாயில் பகுதிகள் உள்ளன. இதில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த முக்கிய நுழைவுவாயில் பகுதியின் கேட் சமீபகாலமாக பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அந்த கேட்டின் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தினுள் உள்ள அனைத்து அலுவலகங்களின் கழிவுப்பொருட்களும் கொட்டப்பட்டு உள்ளது. அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிக்கடி அந்த இடத்தை சுத்தப்படுத்தியும், மீண்டும் மீண்டும் கழிவுப்பொருட்களை கொட்டி விடுகின்றனர். குறிப்பாக கேட்டின் முன்பு குப்பைகள் தேங்கி உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அங்கு மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுவரும் அதிகாரிகள் இதை பார்த்துக்கொண்டேதான் செல்கிறார்கள். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் மற்றொரு கேட் முன்பும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் மணல் கொட்டி நிரப்ப பொதுமக்கள் பல முறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள குப்பைகளை அகற்றியும், பூட்டி வைத்திருக்கும் கேட்டை திறந்தும், குழியான பகுதிகளில் மண் நிரப்பியும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காத வண்ணம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்