படப்பை அருகே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற - பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை அருகே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் சிமெண்ட் தூண் முழுவதும் சேதமடைந்துள்ளதால், அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே சாலமங்கலம் ஊராட்சி உள்ளது. இங்கு இருந்து சிறுமாத்தூர் கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையின் ஓரமாக மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் சிமெண்ட் தூண் முழுவதும் சேதமடைந்துள்ளதால், எலும்புக்கூடு போல் காட்சி அளித்து மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த டிராஸ்பார்மர் இருக்கும் சாலை வழியாக மணிமங்கலம், புஷ்பகிரி, படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். பலத்த காற்று வீசும் போது, எந்த நேரத்திலும் டிரான்ஸ்பார்மர் கீழே சாய்ந்து விழுந்து பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்ற அப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் இந்த சாலையை பயன்படுத்தும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உயிருக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பழுதடைந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதிய டிரான்ஸ்பார்மரை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.