சாணார்பட்டி அருகே, ஆசிரியரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
சாணார்பட்டி அருகே ஆசிரியரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோபால்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் மகிழன் (வயது 33). இவர் கொசவப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி லிபியா (30). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மகிழன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகமடைந்த மகிழன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது லிபியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சாணார்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் லிபியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லிபியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லிபியாவுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷாவும் விசாரணை நடத்துகிறார்.