உளுந்தூர்பேட்டையில், பட்ட பகலில் பயங்கரம் ஸ்டூடியோ உரிமையாளர் வெட்டி கொலை - 2 பேர் சிக்கினர்

உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். பட்டபகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–;

Update:2019-10-01 05:30 IST
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 32). இவர் உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஸ்டூடியோவுக்கு புறப்பட்டு சென்றார். காலை 11 மணிக்கு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே வந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மணிகண்டன் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் அவர் விழுந்தார். பின்னர் அந்த காரில் இறங்கி வந்த மர்மநபர்கள் 6 பேர் திடீரென தாங்கள் கொண்டு வந்த கத்தி, கொடுவால் உள்ளிட்ட ஆயுதங்களால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியது. இந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மர்மநபர்களை தடுக்க முயற்சி செய்தனர். அப்போது மர்மநபர்கள் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர்.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனிடையே வெட்டுப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறக்கும் வரை அங்கேயே நின்ற மர்மநபர்கள், மணிகண்டன் இறந்ததை உறுதி செய்த பின்னர், தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது கார் எதிர்பாராவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கியது.

இதனால் மர்மநபர்கள், வேறு வழியின்றி காரை அங்கேயே விட்டுவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்–இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடினர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே ராவுத்தராயன்குப்பம் அருகே கரும்பு வயலில் பதுங்கிய இருந்த மர்மநபர்கள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தெய்வமணி (33), பரிந்தல் கிராமத்தை சேர்ந்த பிரேம் (23) ஆகியோர் என்பது தெரிந்தது. தொடர்ந்து அவர்களிடம் கள்ளக்காதல் தொடர்பாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட இடத்தில் மர்மநபர்கள் போட்டுவிட்டு சென்ற ஆயுதங்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

தொடர்ந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் அவர் அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம், கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் தப்பிச்சென்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டபகலில் ஸ்டூடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்