செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினி டெம்போ வேன் வெடித்து சிதறி விபத்து - 2 பேர் பலி

செஞ்சி அருகே பட்டாசு ஏற்றி வந்த மினி டெம்போ வேனில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2019-09-30 10:20 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த மினி டெம்போ வேன் ஒன்று, இன்று காலை  வடவானுர்  அருகே வந்த போது திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், வேனை நிறுத்தி விட்டு தண்ணீரை எடுத்து வர முயற்சி செய்துள்ளார்.  இதற்கிடையே அருகில் இருந்த மக்கள்  வாகனத்தில் என்ன இருக்கிறது என கேட்ட போது, பட்டாசுகள் இருப்பதாக வேன் ஓட்டுநர் கூறியுள்ளார். எனவே விரைந்து தீயை அணைக்க பொதுமக்கள் சிலர் முயற்சி செய்தனர். 

அப்போது, திடீரென பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதால் சுற்றி இருந்தவர்கள் சிதறி ஓடினர். தண்ணீருடன் சென்று தீயை அணைக்க  ஓட்டுநர் முயன்றுள்ளார். எனினும் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்