உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுவோம் - பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுவோம் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

Update: 2019-09-29 22:30 GMT
திருவண்ணாமலை,

அரசியல் அமைப்புச் சட்டம் 370 நீக்கம் குறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று மாலை திருவண்ணாமலையில் நடந்தது. மாவட்ட தலைவர் நேரு தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜயன், தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் சேகர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலை, இலக்கியப் பிரிவு தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

முன்னதாக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற இடைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் தோற்பதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ? அத்தனையும் பா.ஜ.க. செய்யும். இதில் சந்தேகம் இல்லை. நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளதால், அவர்களுக்கு எங்களுடைய தொண்டர்கள் நிச்சயமாக வேலை செய்வார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாக தான் போட்டியிடுவோம். பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுவோம். நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் என்று அறிவித்து இருக்கிறார்கள். நவம்பர் மாதம் என்பது பொதுவாக தமிழகத்தில் மழை வரும் மாதம் அதனால் டிசம்பர் மாதம் தேர்தல் வருமானால் நல்லது என்பது எனது கருத்து.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை விருப்ப பாடமாக உள்ளது. விருப்ப பாடமாக அறிவித்த பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது என்பது அபத்தமானது.

நாடாளுமன்ற தேர்தல் போல் அல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் கணிசமான ஆதரவு தருவார்கள் என்பது எனது நம்பிக்கை. காரணம் தற்போது வாக்கு வங்கி அதிகமாகி இருக்கிறது. ஒட்டுமொத்த காஷ்மீரும் அமைதியாக உள்ளது. இதில் 15 சதவீதம் மக்களிடம் மட்டும் தான் இந்த 370 சட்டம் நீக்கம் எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலை உள்ளது. நாட்டுக்கு துரோகம் செய்பவர்களை நாங்கள் கூண்டோடு ஒழிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்