கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை; காரணம் என்ன? போலீஸ் விசாரணை

பெங்களூருவில் கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-29 22:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு இந்திராநகர் அருகே லட்சுமிபுராவில் உள்ள மயானத்தில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் மற்றொருவர் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடியவரை மீட்டு பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் மயானத்தில் பிணமாக கிடந்த மற்றொருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர்கள் 2 பேரும் மாரத்தஹள்ளியை சேர்ந்த ராஜேஷ்(வயது 42) மற்றும் முருகேஷ்(39) என்பதும், 2 பேரும் டொம்லூரில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ராஜேசும், முருகேசும் உறவினர்கள் என்பதும் தெரிந்தது. அதாவது ராஜேசின் மனைவியும், முருகேசின் மனைவியும் அக்காள், தங்கை ஆவார்கள்.

அதே நேரத்தில் மதுவில் விஷத்தை கலந்து 2 பேரும் குடித்திருந்தார்கள். இதில், மயானத்திலேயே ராஜேஷ் உயிர் இழந்துள்ளார்.

உயிருக்கு போராடிய முருகேஷ் ஆஸ்பத்திரியில் இறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் 2 பேரும் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து 2 பேரின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்