காலாண்டு விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குவிந்தனர்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

Update: 2019-09-29 22:45 GMT
மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி ஆகியோர் இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அக்டோபர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் மாமல்லபுரம் வருகை தர உள்ளனர். அப்போது அங்குள்ள புராதன சின்னங்களையும் பார்வையிடுகின்றனர்.

இதையொட்டி, அங்கு தங்கி உள்ள வெளிநாட்டு பயணிகள் குறித்த விவரங்கள் சேகரித்தல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தலைவர்களின் வருகையின் போது, அசம்பாவிதம் எதுவும் நடைபெறாதவண்ணம், அதிகாரிகள் அங்கு சென்று பல கட்ட ஆய்வுகளையும் நடத்தி வருகின்றனர். மேலும் புராதன சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு, சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாமல்லபுரம் தற்போது புதுப்பொலிவு பெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதையொட்டி, தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

பொலிவு பெற்று வரும், மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை பலர் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால், மாமல்லபுரம் கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையே, தலைவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த பலூன் சுடுதல், வளையம் வீசுதல் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகளையும், பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றி இருந்தனர்.

இதனால் ஆக்கிரமிப்பு இல்லாத காரணத்தால், கடற்கரை பகுதி முழுவதும் உள்ள பரந்து விரிந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அமர்ந்து பொழுதை கழித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்தும் அந்தந்த பள்ளிகளின் சார்பில், மாணவ-மாணவிகள் மாமல்லபுரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனால் மாமல்லபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது போல் காட்சியளிக்கின்றது.

மேலும் செய்திகள்