ரெயிலில் அடிபட்டு இறந்தவர்: போலீசாருக்கு தெரியாமல் வாலிபர் உடல் எரிப்பு - தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு
ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபரின் உடல் போலீசாருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரது தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜோலார்பேட்டை,
ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வில்லியம். அவருடைய மகன் சரவணன் (வயது 21). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (19). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று முன்தினம் காலை சரவணன் ஆம்பூர்- விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே பாலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் வில்லியம் மற்றும் உறவினர்கள் சுகுமார், தங்கராஜ், முத்துராமன் ஆகியோர் சரவணனின் உடலை இரவோடு இரவாக எரித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சரவணனின் தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். அவருடைய மனைவி ஷீலா (வயது 32). இவர், நேற்று முன்தினம் மேல்பட்டி ரெயில் நிலையம் யார்டில் தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.