திண்டுக்கல் மக்களுக்கு காமராஜர் அணையில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகம் - தினமும் வழங்க நடவடிக்கை

திண்டுக்கல் மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2019-09-29 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காமராஜர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 23.5 அடி ஆகும். திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் அணை கட்டப்பட்டது. குடகனாறு மற்றும் கூழையாற்றில் இருந்து வரும் தண்ணீர் காமராஜர் அணைக்கு வருகிறது.

இந்த அணையில் இருந்து 5 எம்.எல்.டி. (1 எம்.எல்.டி என்பது10 லட்சம் லிட்டர்) குடிநீர் எடுக்கப்பட்டு திண்டுக்கல் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தொடக்க காலத்தில் இந்த அணையில் இருந்து கிடைக்கும் குடிநீர் திண்டுக்கல் மக்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்பட்டு திண்டுக்கல் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் அணை வறண்டு போனது.

இதையடுத்து ஆத்தூர் காமராஜர் அணை அருகே உள்ள 10 உறைகிணறுகள் மற்றும் 4 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினமும் 1 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 12 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக காமராஜர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதையடுத்து அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் அணையில் இருந்து மீண்டும் குடிநீர் எடுத்து திண்டுக்கல் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது காமராஜர் அணையிலிருந்து தினமும் 4 எம். எல்.டி.குடிநீர் எடுக்கப்படுகிறது. அதேபோல் உறை கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து 1 எம்.எல்.டி. குடிநீரும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 12 எம்.எல்.டி. குடிநீரும் பெறப்படுகிறது. எனவே திண்டுக்கல் நகரில் தினமும் குடிநீர் வழங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்