மருந்து கலந்த விதை நெல்லை தின்ற 30-க்கும் மேற்பட்ட புறாக்கள் சாவு

கீழ்வேளூர் அருகே மருந்து கலந்த விதை நெல்லை தின்ற 30-க்கும் மேற்பட்ட புறாக்கள் இறந்தன.

Update: 2019-09-29 23:00 GMT
சிக்கல்,

கீழ்வேளூர் ஒன்றியம் விடங்கலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி, நேரடி நெல் விதைப்பு பணிகளை செய்து வருகிறார்கள். அரசு வழங்கும் நெல் விதைகளை வாங்கினாலும், புதிய ரக நெல் விதைகளை தனியார் விற்பனை கடைகளில் வாங்குகின்ற னர்.

அப்படி வாங்கும் விவசாயிகள் விதைகள் நேர்த்தியாகவும், பூச்சி தாக்குதல் இல்லாத வகையிலும், மகசூல் கிடைப்பதற்கும் விதை நெல்லுடன் ஒரு குறிப்பிட்ட வகை மருந்துகளை கலந்துள்ளதை வாங்கி தங்கள் வயல்களில் இடுகின்றனர்.

ஆனால் இப்படி விற்பனை செய்யும் விதை நெல் நேரடி நெல் விதைப்பு வயல்களில் தெளித்த பிறகு, வயல்களில் இரை தேடுவதற்காக வரும் குருவிகள், புறாக்கள், மயில்கள் அதனை தின்று பரிதாபமாக இறந்துவிடுகின்றன.

புறாக்கள் இறந்தன

இந்தநிலையில் விடங்கலூரை சேர்ந்த விவசாயி உதயமூர்த்தி கடந்த 4 ஆண்டுகளாக புறாக்களை வளர்த்து வந்துள்ளார். இந்த புறாக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகல் நேரத்தில் அருகே உள்ள வயல்களில் மருந்து கலந்த விதை நெல்லை தின்றதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட புறாக்கள் பரிதாபமாக இறந்தன.

இதுகுறித்து உதயமூர்த்தி கூறுகையில், இந்த புறாக்கள் வயல்களில் கிடக்கும் ஒருவித மருந்து கலந்த விதை நெல்களை தின்றதால் இறந்து விட்டன. சில புறாக்கள் பறக்க முடியாமலும், நடக்க முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் ந‌‌ஷ்டப்பட்டுள்ளேன். இதேபோல வடுகச்சேரி, இறையான்குடி பகுதிகளில் உள்ள புறாக்கள் சில நாட்களுக்கு முன்பு இறந்து போனது. அங்குள்ளவர்கள் இறந்த புறாக்களை குழியில் போட்டு புதைத் துள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்