உலகத்தரத்துடன் உள்நாட்டில் கட்டப்பட்ட ‘ஐ.என்.எஸ். காந்தேரி’ நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு
உலகத்தரத்துடன் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். காந்தேரி நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் பலத்தை புரிந்து கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
மும்பை,
‘ஸ்கார்பியன்’ வகை நீர்மூழ்கி கப்பல்கள் உலக தரம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ‘கல்வாரி’ என்று அழைக்கப்படுகிறது.
2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு ஒத்துழைப்புடன் 6 கல்வாரி வகை நீர்மூழ்கி போர்க் கப்பல்களை உள்நாட்டில் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி ஐ.என்.எஸ். கல்வாரி என்ற முதல் நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மோடி கடந்த 2017-ம் ஆண்டு கடற்படையில் இணைத்தார். அப்போது, இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
2-வது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். காந்தேரி. மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில், இந்த கப்பல் கட்டப்பட்டது.
உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி போர்க் கப்பலான இதன் எடை 1,615 டன் ஆகும். 221 அடி நீளம் கொண்டது. 40 அடி உயரம் கொண்டது. பேட்டரியிலும், டீசலிலும் இயங்கக்கூடியது. கடலுக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் (20 கடல் மைல்) வேகத்திலும், கடல் மேற்பரப்பில் 20 கிலோ மீட்டர் (11 கடல் மைல்) வேகத்திலும் இயங்க கூடியது.
இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் இருந்தபடியும், கடலின் மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் கப்பல்களை ஏவுகணையை வீசி தாக்கும் திறன் கொண்டது. எதிரி கப்பல்களின் கண்ணுக்கு புலப்படாமல் தாக்கும் வல்லமை கொண்டது.
இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டு, கடந்த 2½ ஆண்டுகளாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை முடித்த நிலையில், இதனை கடற்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மும்பை கடற்படை தளத்தில் நடந்தது.
விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். காந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல ஐ.என்.எஸ். நீல்கிரி என்ற போர்க்கப்பலை சோதனை ஓட்டத்துக்காக ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், இந்திய கடற்படையின் பலத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.சபையில் எழுப்பிய நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் பிரதமர் மோடி உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாகவும், பாகிஸ்தானால் எதையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
உள்நாட்டில் சொந்தமாக நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்கக்கூடிய உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இது பெருமைக்குரிய விஷயம்.
நமது பக்கத்து பகை நாடு, இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பயங்கரவாதத்தை ஊடுறுவ செய்வது நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் கடினமான முடிவுகளை எடுக்க நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை நீக்கியது, அதன் ஒரு அங்கம் தான்.
2008-ம் ஆண்டு கடல் மார்க்கமாக ஊடுறுவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். அதேபோன்ற தாக்குதலை இந்திய கடலோர பகுதியில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஆனால் அந்த முயற்சி பலிக்காது. இந்தியா தனது பாதுகாப்பு படையை நவீனமயமாக்கல் மற்றும் வலிமைப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
கடல் வழி வர்த்தகத்தில் நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். அதே அளவுக்கு கடற்கொள்ளை அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை உணர்ந்து நாம் கடற்படையை வலிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதேநேரத்தில் சமீப காலமாக அரபிக் கடல் பகுதியில் கடற்கொள்ளை பெருமளவு குறைந்துள்ளது. இதற்காக கடற்படைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.