பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தவறாக பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தவறாக பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
நாக்பூர்,
பண்டாரா மாவட்டம் தும்சர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரண் வாக்மாரே. இவர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 16-ந் தேதி கட்டுமான தொழிலாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. சரண் வாக்மாரே கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது, இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. சரண் வாக்மாரே பெண் போலீஸ் அதிகாரியை தவறான வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி, தும்சர் போலீஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. சரண் வாக்மாரே மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணின் கண்ணியத்துக்கு குந்தகம் இழைக்கும் நோக்கில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ. சரண் வாக்மாரே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று எம்.எல்.ஏ. சரண் வாக்மரேவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.