மகாளய அமாவாசையையொட்டி குளித்தலை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையையொட்டி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் திரளானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.;

Update: 2019-09-28 22:30 GMT
குளித்தலை,

அமாவாசை தினங்களில் தாய், தந்தையை இழந்தவர்கள் அவர்களின் வீடுகளில் விரதம் இருந்து தாய், தந்தை மற்றும் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். இருப்பினும் வருடத்தில் வரும் அமாவாசை நாட்களான மகாளய, தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் ஆற்றங்கரைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை புண்ணியமாக தமிழர்கள் கருதுகின்றனர். அதிலும் காசிக்கும், கங்கைக்கும் அடுத்தபடியாக உள்ள காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்வதை மிகவும் புண்ணியமாக கருதுகின்றனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இந்தநிலையில் மிகமுக்கிய அமாவாசைகளில் ஒன்றாக கருதப்படும் மகாளய அமாவாசையான நேற்று, அதிகாலை முதலே குளித்தலையை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட திரளானோர், குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர். அங்கு புனித நீராடி ஆங்காங்கே அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் சென்று தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், தங்களுக்கு எல்லா நன்மைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்று வேண்டி தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்தும் மற்றும் எள் தெளித்தும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் அதை காவிரி ஆற்றில்விட்டு வழிபட்டனர். மேலும் பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை வழங்கினார்கள். இதையடுத்து கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு எதிரே உள்ள பிரசித்திபெற்ற கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று கடம்பவனேசுவரரை வழிபட்டு சென்றனர்.

மகாளய அமாவாசையையொட்டி கரூர்வாங்கல், நெரூர் காவிரியாற்றிலும் முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி அங்கு போலீசார் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்