வயலில் பறந்த ரிமோட் ஹெலிகாப்டர் கறம்பக்குடியில் நள்ளிரவில் பரபரப்பு

கறம்பக்குடியில் நள்ளிரவு நேரத்தில் வயலில் ரிமோட் ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-28 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அக்ர ஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவரும், அவரது நண்பர் ஜெய்சங்கரும், கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள ராஜாவுக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் நள்ளிரவு தண்ணீர் பாய்ச்சும் பணியை கண்காணித்து கொண்டிருந்தனர். இதேபோல் அந்த பகுதியில் உள்ள மற்ற வயல்களில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

அப்போது ராஜா வயலின் மேற்பகுதியில் வெளிச்சத்துடன் ஏதோ பறந்தது. அதை அப்பகுதியில் இருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தபோது அது கீழே விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த விவசாயிகள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர். பின்னர் ராஜா, ஜெய்சங்கர் இருவரும் அது ரிமோட் மூலம் இயக்கப்படும் விளையாட்டு ஹெலிகாப்டர் என்பதை அறிந்து அதை கையில் எடுத்து பார்த்தனர்.

பரபரப்பு

இதையடுத்து அதில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த அவர்கள் கறம்பக்குடி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசாரிடம் கேட்டபோது, அது சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் ரிமோட் ஹெலிகாப்டர் எனவும், அதில் ரிமோட்டில் இயக்கும் சிப் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பதாகவும், கேமரா ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். 200 மீட்டர் மட்டுமே பறக்கும் தன்மையுள்ள இந்த விளையாட்டு ஹெலிகாப்டர் இரவில் அந்த பகுதியில் இயக்கப்பட்டது எப்படி? என விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

கறம்பக்குடியில் இரவில் ரிமோட் ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்