வலது கை கட்டை விரலை இழந்தாலும் இடது கையால் தேர்வு எழுதி சாதிக்க துடிக்கும் பாலிடெக்னிக் மாணவர்

வலது கை கட்டை விரலை இழந்தாலும் இடது கையால் தேர்வு எழுதி சாதிக்க துடிக்கும் பாலிடெக்னிக் மாணவரின் தன்னம்பிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.;

Update:2019-09-29 04:15 IST
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்-செந்தில்குமாரி தம்பதியரின் மகன் ரி‌ஷிகேசி (வயது16). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 412 மதிப்பெண் பெற்ற இவர் தற்போது பூதலூர் அருகே புதுப்பட்டியில் உள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சிறுவயதில் அரிவாள் தவறுதலாக கையில் விழுந்ததில் தனது வலது கை கட்டை விரலை ரி‌ஷிகேசி இழந்து விட்டார். விளையாட்டு பிள்ளையாக இருந்தபோது வலது கை கட்டை விரலை இழந்தது பெரிய இழப்பாக அவருக்கு தெரியவில்லை.

எழுதுவதற்கு சிரமம்

பள்ளியில் சேர்ந்து பாடங்களை எழுத முடியாமல் மிகவும் சிரமப்பட்டபோது அவர் தனது இழப்பை உணர தொடங்கினார். பின்னர் சற்றும் மனம் தளராமல் இடது கையால் எழுதும் பழக்கத்தை படிப்படியாக வளர்த்துக்கொண்டு தற்போது பாலிடெக்னிக் கல்லூரி வரை வகுப்பில் முதன்மை மாணவர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.

கட்டை விரலை இழந்தாலும் சாதிக்க துடிக்கும் ரி‌ஷிகேசிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

டாக்டர்கள் கைவிரிப்பு

சிறிய வயதில் அரிவாள் விழுந்ததில் வலது கை கட்டை விரல் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்றபோதும் விரலை ஒட்ட முடியாது என டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். செம்மங்குடி தொடக்கப்பள்ளியில் சேர்ந்தபோது என்னால் எழுத முடியவில்லை.

அப்போது ஆசிரியர் குமார் என்பவர், ‘உன்னால் முடியும் இடது கையால் எழுது என்று ஊக்கப்படுத்தினார்’. தற்போது என்னால் வேகமாக எழுத முடியவில்லை என்பது தான் குறை. இதை காரணமாக கூறியதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி தேர்ச்சி பெற்றேன். தற்போது பாலிடெக்னிக் கல்லூரியிலும் தேர்வு எழுத கூடுதல் நேரம் தருகிறார்கள். செய்முறை தேர்வை 2 கைகளாலும் எதிர்கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சவால்

மாணவர் ரி‌ஷிகேசி குறித்து ரம்யா சத்திய நாதன் பாலிடெக்னிக் தலைவர் சத்தியநாதன் மற்றும் முதல்வர் குமரன் ஆகியோர் கூறியதாவது:-

ஆட்டோ மொபைல் பிரிவில் படித்து வரும் ரி‌ஷிகேசி முதலில் கல்லூரியில் சேர்ந்தபோது எந்திரங்களை கையாள்வது அவருக்கு சிரமமாக இருக்கும் என கருதினோம். ஆனால் அவர் தற்போது மற்ற மாணவர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக எந்திரங்களை கையாண்டு வருகிறார். இது வியப்பை தருகிறது.

அவருடைய குடும்ப சூழலை கருத்தில் கொண்டு கல்லூரியில் என்னென்ன சலுகைகள் வழங்க முடியுமோ அனைத்தையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். வலது கை கட்டை விரலை இழந்தாலும் சாதிக்க துடிக்கும் மாணவர் ரி‌ஷிகேசி, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு முன்மாதிரி என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயாரின் உதவியுடன் படித்து வரும் அவருடைய தன்னம்பிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்