சிதம்பரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபரின் இல்ல திருமண விழா ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த திருமணம் கோவில் ஆகம விதிமுறைகளை மீறி நடந்ததாகவும், இதற்கு அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில குழு மூசா, நகர செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பனை செல்வம், வாஞ்சிநாதன், மூர்த்தி, ஜெயசீலன், முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார்.
நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் மரபை மீறி திருமணம் நடத்த அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த கோவிலை தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும், கோவில் வரவு, செலவுகளை அரசு தலையிட்டு பார்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணாமலை நகர் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.