சரத்பவார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் முடிவை கைவிட்டார்

மும்பை போலீஸ் கமிஷனரின் கோரிக்கையை ஏற்று சரத்பவார் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-27 23:35 GMT
மும்பை, 

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு மும்பை ஐகோர்ட்டு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் மற்றும் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்தநிலையில் சரத்பவார் மும்பை பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்போவதாக கூறியிருந்தார். அவர் நேற்று பகல் 2 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வருவதாக அறிவித்து இருந்தார். மேலும் கட்சி தொண்டர்கள் யாரும் அமலாக்கத்துறை அலுவலகம் முன் திரள வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் எதுவும் அனுப்பவில்லை என்பதால், சரத்பவாரை அமலாக்கத்துறை அலவலகத்துக்கள் அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். எனவே அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எனினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் திரள்வதை தடுக்க அமலாக்கத்துறை அலுவலகம் முன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல கொலபா, கப்பரடே, மெரின் டிரைவ், டோங்கிரி, ஆசாத் மைதான், ஜே.ஜே. மார்க், எம்.ஆர்.ஏ. மார்க் போலீஸ்நிலையம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சில சாலைகளில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்பட மூத்த தலைவர்கள் சரத்பவாரின் வீட்டுக்கு சென்றனர். இதற்கிடையே அமலாக்கத்துறை அலுவலகம் அருகில் திரண்ட தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சரத்பவார் மதியம் 2 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்தநிலையில் திடீரென மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே, இணை போலீஸ் கமிஷனர் வினய் சுபே ஆகியோர் சரத்பவாரின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் சரத்பவாரை சந்தித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லவேண்டாம் என கேட்டு கொண்டனர்.

இதேபோல அமலாக்கத்துறையும் விசாரணைக்கு ஆஜராக வர வேண்டாம் என சரத்பாருக்கு இ-மெயில் அனுப்பியது. அமலாக்கத்துறை, சரத்பவாருக்கு அனுப்பிய இ-மெயிலில், ‘‘நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வரவேண்டாம். தேவைப்பட்டால் நாங்களே அழைக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து சரத்பவார் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லும் முடிவை கைவிட்டார். மேலும் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிவசேனா கட்சி மற்றும் தலைவர்களுக்கு நன்றி கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மும்பை போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர் என்னை சந்தித்து சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அதனால் நான் செல்லவில்லை’’ என்றார்.

போலீஸ் கமிஷனரின் கோரிக்கையை ஏற்று சரத்பவார் எடுத்த முடிவால், மும்பையில் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்