பொன்னமராவதி அருகே, ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை முயற்சி - வெளிப்பக்கமாக பூட்டி சென்ற ஆசாமிகளுக்கு வலைவீச்சு

பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்று, வீடுகளை வெளிப்பக்கமாக பூட்டி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2019-09-27 21:45 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் அருணா தேவி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனையடுத்து மர்ம நபர்கள் அருகே உள்ள சரவணக்குமார் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி ஓட்டி சென்றனர்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் உள்ள வயர் அறுந்ததால், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். இதேபோல ஆசிரியர் குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோல ஆலவயல் செல்லும் சாலையில் உள்ள வெள்ளையன் என்பவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மொபட்டை மர்மநபர்கள் திருட முயன்றனர். அப்போது வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த வெள்ளையன் சத்தம் போட்டதால், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

4 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டும், எதுவும் கிடைக்காததால், ஆத்திரமடைந்த கொள்ளை யர்கள் சரவணக்குமார், அருணாதேவி உள்பட அனைவரின் வீட்டையும் வெளிபக்கமாக பூட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவு முழுவதும் பயத்தில் கதவை தட்டிக்கொண்டே இருந்தனர். பின்னர் காலையில் அக்கம், பக்கத்தினர் வந்து, வீட்டை திறந்து விட்ட பின்னர்தான் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தால் கொப்பனாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்