கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றியதாக, மனைவி மீது புரோட்டா மாஸ்டர் பரபரப்பு புகார்
கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றியதாக மனைவி மீது புரோட்டா மாஸ்டர் பரபரப்பு புகார் கூறினார். மேலும், தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனுவும் அளித்தார்.;
திருச்சி,
திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 41). இவர் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் திருச்சி அல்லூரை சேர்ந்த காந்திமதியை 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு, சரவணன் தனது மனைவி மற்றும் தாய், சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் சரவணனின் தாய்க்கும், காந்திமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காந்திமதி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சரவணனை வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சரவணனுக்கும், காந்திமதிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந் தேதி இரவு ஏற்பட்ட பிரச்சினையின்போது காந்திமதி, சரவணன் முகத்தில் மிளகாய்பொடியை தூவி கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் அவர் புகார் அளித்தார்.
இதற்கிடையே சரவணனும், அவரது தாயும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக காந்திமதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் சரவணனிடம் விசாரித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில், “கடந்த மாதம் எனது வீட்டில் நடந்த பிரச்சினையின்போது எனது மனைவி என் மீது மிளகாய் பொடியை தூவி கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி விட்டார். தற்போது என் மீது வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். ஆகவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.