நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. உறுதி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
வானூர்,
வானூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் வானூர் அருகே பட்டானூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், புதுச்சேரி மாநில அமைப்பு செயலாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் கல்வி வளர்ச்சியில் இந்த மாவட்டம் பின்தங்கி உள்ளது. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். எங்கள் கட்சியினரை சீண்டினால் சும்மாவிடமாட்டேன்.
தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. அதனை பாட்டாளி மக்கள் கட்சியால்தான் நிரப்ப முடியும். வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வானூர் தொகுதியை நமது கட்சி கைப்பற்றும்.
நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள். உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும். இது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
மேலும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சிவக்குமார், மாநில துணைத்தலைவர்கள் கருணாநிதி, சங்கர், மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கதிர்வேல், திருச்சிற்றம்பலம் பேரூராட்சி செயலாளர் சவந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.