கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள்- டெம்போ மோதல்; வாலிபர் பலி - சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயம்

கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். கேரள சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-27 22:15 GMT
கன்னியாகுமரி,

மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஜோஷி (வயது 32). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று இந்த விடுதிக்கு சுற்றுலா பயணிகளான கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அனிஷ் (32), ஷாபு (33) ஆகியோர் தங்க வந்தனர்.

அப்போது, அந்த விடுதியில் தங்களுக்கு போதிய வசதிகள் இல்லை என அந்த 2 வாலிபர்களும் கூறியதாக தெரிகிறது. உடனே, ஜோஷி அவர்களுக்கு உதவ முன் வந்தார். அதன்படி மற்றொரு விடுதிக்கு அவர்களை அழைத்து செல்வதாக கூறினார். 2 வாலிபர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் 3 பேரும் சென்றனர். அவர்கள் கோவளம் ரோட்டில் சிலுவை நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே, 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜோஷி பரிதாபமாக இறந்தார். அனிஷ், ஷாபு ஆகிய 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவை ஓட்டி வந்த பொன்னார்விளையை சேர்ந்த நேசகுமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்