தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா குறித்து ஒரு வாரத்தில் கருத்து கேட்பு கூட்டம் - மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா குறித்து ஒரு வாரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

Update: 2019-09-27 22:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமெக் ஜெயக்குமார், உதவி இயக்குனர்கள் கோபிநாதன் (குளச்சல்), மோகன்ராஜ் (நாகர்கோவில்), மீனவ சங்க பிரதிநிதிகள் குறும்பனை பெர்லின், விமல்ராஜ், பனிமயம், ஜோஸ்பில்பின், அலெக்சாண்டர், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் காரசார விவாத விவரம் வருமாறு:-

தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா மூலம் கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு மேல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் 12 நாட்டிக்கல் மைலை தாண்டிச் செல்ல ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகும். அனுமதி பெறாமல் மீன்பிடிக்க சென்றால் மீனவர்களை கைது செய்து 6 மாதம் ஜெயிலில் அடைக்கவும், இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

மேலும் 2020-ம் ஆண்டுக்குள் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும் நிறுத்தும் முனைப்பில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையை மறுப்பதோடு, எதிர்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், கப்பல்களுக்கும் மீன்பிடிக்க உரிமை கிடைக்கும். அவர்கள் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடித்து கடல் வளத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுவார்கள்.

இந்த மசோதா தொடர்பாக குளச்சல் மீன்துறை அலுவலகத்தில் ரகசியமாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற அனைத்து மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்காமல், யாரோ ஒரு சிலரை அழைத்து கருத்துக்கேட்டு, அந்த கருத்துக்களை அரசுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது மிகப்பெரும் சதியாகும்.

எனவே இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை வெளிப்படையாக மீண்டும் நடத்த வேண்டும். பாரம்பரியமிக்க மீனவர்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.


ஒவ்வொரு மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தின்போதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கலந்துகொள்ள செய்ய வேண்டும். கன்னியாகுமரி மீன்வளக்கல்லூரியை சுயநிதியில் இருந்து மாற்றி அரசு கல்லூரியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியவிளை கிராமத்தில் விதிமுறைகளை மீறி கனரக எந்திரங்களை கொண்டு மணல் அள்ளும் அரியவகை மணல் ஆலை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிள்ளியூர் தாலுகா அலுவலகம் செல்லும் அரசு பஸ்சை குறும்பனை வரை இயக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடற்கரை கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செய்யப்பட்ட பணி விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

வருகிற நவம்பர் 21-ந் தேதி உலக மீனவர் தினமாகும். இந்த மீனவர் தினவிழாவை அரசு சார்பில் மிக பிரமாண்டமாக கொண்டாடவும், உள்ளூர் விடுமுறை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு தென்னந்தோப்புகளை அழித்து மணல் தோண்டப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. விதிமீறலில் ஈடுபடும் இந்த மணல் ஆலை மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, அதன் உண்மை நிலையை கலெக்டர் அறிக்கையாக வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளாக மீனவர்களுக்கு மண்எண்ணெய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மானியம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. அதனை மீண்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதத்தில் ஈடுபட்டனர். கடல் மீன்வள சட்ட மசோதா உள்ளிட்ட சில பிரச்சினைகளின் மீது மீனவர்கள் காரசாரமாக விவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குறும்பனை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு மீனவர்கள் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா தொடர்பாக அரசு ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக ஒரு வார காலத்தில் தனியாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். அதில் மீனவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். மணவாளக்குறிச்சி மணல் ஆலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடலில் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்த குறும்பனையைச் சேர்ந்த பிஜூ, இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த சவேரியார் அடிமை ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்துக்கான நிவாரணத் தொகையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

மேலும் செய்திகள்