திருவண்ணாமலையில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது - 2 லாரிகள் பறிமுதல்
திருவண்ணாமலையில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை,
இதுகுறித்து நேற்று மாலையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேல்செங்கம் பகுதியில் சசிக்குமார் என்பவர் கடந்த 26-ந் தேதி இரவு கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த லாரியில் இருந்து இறங்கி வந்த சிலர் அவரை வழிமடக்கினர்.
பின்னர் அவர்கள் சசிக்குமாரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை அடித்து தப்பி சென்று உள்ளனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 11 போலீசார் கொண்ட தனிப்படையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.
லாரி எந்த வழியாக சென்றது என்பதை வைத்து தொடர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலசபாக்கத்தில் 2 லாரிகளில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கோட்டீஸ்வரர் (வயது 44), சின்னராஜ் (34), விஜயகுமார் (35), ரியாஸ் (39), கோவையை சேர்ந்த பொன்ராஜ் (48) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் இரவு நேரங்களில் பைபாஸ் சாலையில் நள்ளிரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் சரக்கு வாகனங்களில் யாருக்கும் தெரியாமல் கட்டிங் பிளேடு போன்ற பெரிய ஆயுதங்களை வைத்து திறந்து அதில் இருந்து பொருட்களை கொள்ளையடித்து வந்து உள்ளனர்.
இவர்கள் திண்டிவனம், திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி சாலையை கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தி வந்து உள்ளனர்.
இவர்கள் தனிப்பாடி பகுதியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள், மேல்செங்கத்தில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 840 மதிப்பிலான தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள், கலசபாக்கத்தில் ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 392 மதிப்பிலான கியாஸ் அடுப்புகள், கலசபாக்கத்தில் சசிக்குமாரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்ததாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படைகளில் உரிய விசாரணை நடத்தி இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.