கோவில் நிலத்தை ஏலம் விடுவது தொடர்பாக அதிகாரிகள், விவசாயிகள் இடையே வாக்குவாதம்

காரிமங்கலம் அருகே சாக்கியம்மன், செல்லியம்மன் கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஏலம் விடுவது தொடர்பாக அதிகாரிகள், விவசாயிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.;

Update: 2019-09-27 22:30 GMT
காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி சாக்கியம்மன், செல்லியம்மன் கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்களில் எட்டியானூர், அலத்தியானூர், சின்ன முதலிப்பட்டி, வாக்கன் கொட்டாய், கெட்டூர், அனுமந்தபுரம், கொட்டாவூர் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில்களுக்கு சொந்தமாக 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் சுமார் 60 ஏக்கர் நிலத்தை ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் சுமார் 40 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மட்டும் கெட்டூர் கிராமத்தில் ஏலம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை கெட்டூரில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சங்கர், செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் காரிமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செங்கதிர், சின்னசாமி மற்றும் போலீசார் அலத்தியானூர், கெட்டூர், கொட்டாவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் ஏற்கனவே கோவில் நிலத்தை ஏலம் எடுத்தவர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளாததால் ஏலம் நடத்த முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிலம் தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன். அவருடைய விசாரணைக்கு இருதரப்பினரும் ஆஜராகி தங்களது விளக்கத்தை கேட்டு பெறுங்கள் என்று கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாண்டியம்மாள் ஏலத்தை ரத்து செய்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்