உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பெண்கள் திரண்டதால் பரபரப்பு

உடுமலை அருகே சங்கர்நகர் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-27 23:00 GMT
உடுமலை,

உடுமலை தாராபுரம் சாலையில் உள்ளது சங்கர்நகர். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. அதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நேற்று மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள் திரண்டு வந்து அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பள்ளத்தை சுற்றிலும் நின்று கொண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு திரண்டு இருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் கூறும் போது, இங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீசார் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதாக கூறினார்கள். மேலும் அங்கு செல்போன் கோபுரம் அமைக்க யாரும் வராததை தொடர்ந்து அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்