பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடந்த முறைகேட்டை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடந்த முறைகேட்டை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-09-27 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:-

இயற்கை சீற்றங்களால் பல ஆண்டுகளாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நாகை மாவட்ட விவசாயிகளின் அனைத்து விவசாய கடன் களையும் தள்ளுபடி செய்யவேண்டும். 2018-19-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்கவேண்டும். நாகையில் இருந்து மீன்வள பல்கலைக்கழகம் வழியாக தேமங்கலம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலையை மக்கள் நலன் கருதி சீரமைக்க வேண்டும்.

கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:-

வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள வயல்களில் புகையிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு புற்றுநோய் வருவதால் இதற்கு மாற்று பயிராக கடலை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு தரமான விதைக்கடலையும், ஜிப்சமும் அரசு மானியத்தில் வழங்க வேண்டும். மேலும் கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்வதற்கு விதையை வழங்கி, அதற்குறிய சாகுபடி நுட்பத்தை சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு பதிலாக தென்னை கன்றுகளை வழங்கவேண்டும்.

நாகை, திருவாரூர் ஆற்றுப்பாசன சங்க தலைவர் ராமகிருஷ்ணன்:-

ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்து விடவேண்டும். மேட்டூர் அணையின் உபரி நீர் நிறுத்தப்பட்டவுடன் முறைவைத்து 6 தினங்கள் தண்ணீர் திறந்து விடவேண்டும். யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்க்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கோபிகணேசன்:-

2016-17, 18-19 ஆகிய 3 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டறிய விசாரணை கமிஷன் அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் ஏதும் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட வில்லை. எனவே புதிய கடன் வழங்க வேண்டும். மயிலாடுதுறை கோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விதைகளும், நாற்றுகளும் அழுகி விட்டது. எனவே நெல் விதைகளை இலவசமாக வழங்கவேண்டும்.

காங்கிரஸ் கீழையூர் வட்டார தலைவர் சுப்பிரமணியன்:-

மீனம்பநல்லூர் பிள்ளையார் குளத்தை தூர்வார வேண்டும். அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் மற்றும் படித்துறை கட்டிதரவேண்டும். மீனம்பநல்லூர் முதல் மடப்புரம் தொட்டிவாய்க்கால் மேலவாழக்கரை வரை தார்சாலை அமைத்து தரவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதில் செல்வராஜ் எம்.பி., மதிவாணன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்