நுழைவு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சுருளி அருவி வசூல் மையத்தை அனைத்துக்கட்சியினர் முற்றுகையிட முயற்சி
சுருளி அருவியில் உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் ஊர்வலமாக சென்று அங்குள்ள வனத்துறை கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலாதலமாகவும், புண்ணியஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி முதல் சுருளி அருவியில் நுழைவு கட்டணத்தை பெரியவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.30, சிறியவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.20 என்று உயர்த்தி வனத்துறையினர் அறிவித்தனர். இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும்அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ்., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் சார்பில் கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி ஆகிய 3 பகுதியில் இருந்து நேற்று ஊர்வலமாக சென்று சுருளி அருவியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை கம்பத்தில் இருந்து தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையிலும், கூடலூர் பகுதியில் இருந்து ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமையிலும், காமயகவுண்டன்பட்டியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. லாசர் தலைமையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுருளி அருவிக்கு நடந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று அங்குள்ள வனத்துறை கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்பு கம்பிகளை சாலையில் வைத்து மறித்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீசாரின் தடுப்பு கம்பிகளை தள்ளி விட்டு போராட்டக்காரர்கள் வனத்துறை கட்டண வசூல் மையத்தை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் போராட்டக்காரர்கள் உள்ளே வந்து விடாமல் இருக்க நுழைவு வாயிலை அடைத்தனர். மேலும் அங்கு வனஅலுவலர் ஜீவனா தலைமையில் ஏராளமான வனத்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு திரண்டு இருந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கட்டண உயர்ை-வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கு அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்து பேசினார்கள். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.