சாஸ்தா கோவில் அணையில் இருந்து செட்டியார்பட்டி சேர்வராயன் கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

சாஸ்தா கோவில் அணையில் இருந்து செட்டியார்பட்டி சேர்வராயன் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-09-27 22:15 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சின் குடிநீர் ஆதாரமான சேர்வராயன் கண்மாயில் நீர் குறைவாக உள்ளதால் சாஸ்தா கோவில் அணையில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதையடுத்து தண்ணீர் கால்வாய் வழியாக கண்மாய்க்கு திறந்துவிடப்பட்டதை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., செட்டியார்பட்டி செயல் அலுவலர் அழகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது எம்.எல்.ஏ. கூறியதாவது:– செட்டியார்பட்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாஸ்தா கோவில் அணை அருகில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 2 ராட்சத கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் ரூ.250 லட்சம் மதிப்பீட்டில் தேவதானம் முதல் சாஸ்தா கோவில் வரை விரைவில் தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது.

செட்டியார்பட்டி, சேத்தூர் உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் தண்ணீர் பிரச்சினை இருந்தால் எனது கவனத்திற்கு கொண்டுவந்தால் உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி அலுவலர்கள் முனியசாமி, கருப்பசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், முகவூர் ஊராட்சி செயலாளர் தொந்தியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்