தசரா விழாவையொட்டி பெங்களூரு-தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பஸ்கள்

தசரா விழாவையொட்டி பெங்களூருவில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.

Update: 2019-09-27 00:00 GMT
பெங்களூரு, 

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 29-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம்(அக்டோபர்) 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வருகிற 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை பெங்களூருவில் இருந்து மைசூரு உள்பட மாநிலத்தின் பிற இடங்களுக்கும், தமிழகத்துக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 8-ந் தேதி கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் பெங்களூருவுக்கு வருகின்றன.

அதன்படி பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையம், மைசூரு ரோடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, சிருங்கேரி, ஒரநாடு, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கார்வார், பல்லாரி, ஒசப்பேட்டே, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன.

சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயங்க உள்ளன. அத்துடன் இந்த பஸ் நிலையங்களில் இருந்து ஐதராபாத், சிரட்டி, புனே, எர்ணாகுளம் உள்பட வேறு மாநிலங்களின் வெவ்வேறு இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன.

குறிப்பாக மைசூரு தசரா விழாவையொட்டி பெங்களூருவில் உள்ள மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூருவுக்கு 175 சிறப்பு பஸ்களும், மைசூருவில் இருந்து அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களான சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்.அணை-பிருந்தாவன் கார்டன், ஸ்ரீரங்கப்பட்டணா, நஞ்சன்கூடு, மடிகேரி, மண்டியா, மலவள்ளி, எச்.டி.கோட்டை, சாம்ராஜ்நகர், உன்சூர், கே.ஆர்.நகர், குண்டலுபேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு 175 சிறப்பு பஸ்கள் செல்கின்றன.

அத்துடன் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மைசூருவுக்கும் சிறப்பு பஸ்கள் செல்ல உள்ளனர். பயணிகள் www.ksrtc.in என்ற இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரே டிக்கெட்டில் 4 அல்லது அதற்கு அதிகமான பயணிகள் சேர்ந்து ஒரே டிக்கெட்டாக முன்பதிவு செய்தால் கட்டணத்தில் 5 சதவீதமும், ஒரு இடத்தில் இருந்து செல்வது, அங்கிருந்து திரும்பி வருவது ஆகியவற்றுக்கு சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டணத்தில் 10 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்