‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: விருத்தாசலத்தில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் விருத்தாசலம் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட கடைகளை உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அகற்றினார்.;
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் கடைவீதி, பெண்ணாடம் சாலை, ஜங்ஷன் சாலை, கடலூர் சாலை, சேலம் சாலை ஆகிய பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள் வைத்தும், சாலையோர தரைவிரிப்பு கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்வதாலும், கடைகளின் முன்பு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதாலும் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள் அவதியடைந்து வந்தனர்.
மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விருத்தாசலம் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மறுநாளே மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தன. அதாவது சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மீண்டும் தங்களது இடத்துக்கு வந்து கடை அமைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். இதனால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான அதிவிரைவு படை போலீசார் கடைவீதி, சன்னதி வீதி, தென்கோட்டை வீதி, பஸ் நிலையம் ஆகிய பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள், தரை விரிப்பு கடைகளை அகற்றினர். மேலும் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த கணபதி என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நூற்றுக்கும் அதிகமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.