வாகனங்களில் ஏற்றும்போது பட்டாசு பண்டல்களை கவனத்துடன் கையாள வேண்டும் - வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி பேச்சு

பட்டாசு பண்டல்களை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி கூறினார்.

Update: 2019-09-26 21:45 GMT
சிவகாசி, 

வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர் களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சிவகாசி பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகாசி துணை முதன்மை வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சுந்தரேசன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசுகளை தயார் செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நீங்கள் அனைவரும் மதிக்க வேண்டும். மாசு இல்லாத பட்டாசுகளை தயாரிக்க உங்களால் முடியும். தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை 2018-ம் ஆண்டு விற்பனைக்கு பயன்படுத்த கூடாது என்றும், அந்த பட்டாசுகளை 2017 டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் அழித்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

இந்த வருட தீபாவளி விபத்து இல்லாத தீபாவளியாக இருக்க வேண்டும். பட்டாசு கடைகள் மாடி கட்டிடத்தில் இயங்க கூடாது. தரை தளத்தில் தான் இயங்க வேண்டும். மருத்துவமனை அருகில் பட்டாசு கடைகள் இருக்க கூடாது. விதிகளை பின்பற்றி பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழிப்புணர்வு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சிவகாசி வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பட்டாசு குடோன் மேற்பார்வையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுந்தரேசன் கலந்து கொண்டு பேசும்போது, பட்டாசு பண்டல்களை வாகனங்களில் ஏற்றும் போதும், இறக்கும் போது தூக்கி எறியக்கூடாது. பட்டாசு வைக்கப்படும் குடோனை சுற்றி 15 மீட்டர் தூரம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வெளிபகுதியில் பட்டாசு பண்டல்களை அடுக்கி வைக்க கூடாது என்றார். இந்த கூட்டத்தில் சிவகாசி பகுதியில் உள்ள 100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் இருந்து அதன் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். மேலும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பாண்டே, அமித்கோயல், நித்தின்கோயல், பிரலேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசு குடோன் மேற்பார்வையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்