காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தோவாளை மின்வாரிய அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தோவாளை மின்வாரிய அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-26 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

தோவாளை மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேன், மின் உதவியாளர் உள்ளிட்ட 8 பேருக்கு பதிலாக ஒரே ஒரு நபர் மட்டும் பணியில் உள்ளார். மற்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மின் வினியோக கோளாறு ஏற்பட்டாலும், டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தாலும் அவற்றை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினையால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் அலுவலகத்தில் தேவையான பணியாளர்களை நியமிக்கக்கோரி தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் ஊராட்சி தி.மு.க. செயலாளர் கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாணு உள்பட ஏராளமான தி.மு.க.வினர் தோவாளை மின்வாரிய அலுவலத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது, அங்கு அதிகாரி இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த ஊழியரிடம் மனு கொடுத்து விட்டு அலுவலகம் முன் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில், மின்வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் தோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜய், அன்பு நிதி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மகராஜ பிள்ளை, மாணவரணி செயலாளர் சங்கர், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சேதுவேல், நிர்வாகிகள் கண்ணன், காளியப்பன், முத்துலெட்சுமி, இம்மானுவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்