மாவட்டம் முழுவதும் மழை: அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 110.3 மில்லி மீட்டர் பதிவானது
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 110.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் திருவண்ணாமலை காந்திநகர், அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பின்னர் நள்ளிரவு வரை மழை விட்டு, விட்டு பெய்தது. திருவண்ணாமலை தாலுகா மேல்கச்சிராப்பட்டு பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரது பசு மாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது.
இதேபோல மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 110.3 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக செய்யாறில் 6.5 மில்லி மீட்டரும் மழை பாதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கலசபாக்கம் - 105, வந்தவாசி - 39, ஆரணி - 17.8, செங்கம் - 27.7, சாத்தனூர் அணை - 20.6, கீழ்பென்னாத்தூர் - 17, தண்டராம்பட்டு - 16, சேத்துப்பட்டு - 12.4, போளூர்- 12.2, வெம்பாக்கம் - 12..
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அணைகள் உள்ளன. இதில் 119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 67.60 அடி தண்ணீரும், 60 அடி கொள்ளளவு கொண்ட குப்பநத்தம் அணையில் 40.67 அடி தண்ணீரும், 22.97 அடி கொள்ளளவு கொண்ட மிருகண்டநதி அணையில் 8.86 அடி தண்ணீரும், 62.32 அடி கொள்ளளவு கொண்ட செண்பகத்தோப்பு அணையில் 45.92 அடி தண்ணீரும் உள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்த பல்வேறு பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ஆனால் சாத்தனூர் அணைக்கு கொஞ்சம் கூட தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.