பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சேலம் வருகிறார்.

Update: 2019-09-26 23:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) சேலம் வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் அங்கிருந்து காரில் சேலம் வருகிறார். நாளை (சனிக்கிழமை) காலை சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் முதல்-அமைச்சரிடம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர். இதையடுத்து அவர், சங்ககிரி தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் சங்ககிரியில் உள்ள டி.ஆர்.எம். திருமண மண்டபத்தில் மனுக்களை பெறுகிறார்.

நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை மேட்டூரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர்.பின்னர் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் ஓமலூர் நடராஜ செட்டியார் திருமண மண்டபத்தில் முதல்-அமைச்சர் மனுக்கள் பெறுகிறார். இதையடுத்து மாலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்