புதுச்சத்திரம் அருகே வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை
புதுச்சத்திரம் அருகே வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.;
நாமக்கல்,
புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். இவர் குடும்பத்துடன் நாமக்கல் கங்காநகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் முருகேசனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை.
இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட முருகேசன் கண்ணூர்பட்டியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இறந்து போன முருகேசனுக்கு இந்திராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்திராணி திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சத்திரம் அருகே உள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருடைய மகன் மதன்குமார் (23). இவர் பாலிடெக்னிக் முடித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை திருமணம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த மதன்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டார்.
மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மதன்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த இரு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.