ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில் வரத்து குறைவால் தேங்காய் விலை உயர்வு
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில் வரத்து குறைவு காரணமாக தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வடகாடு மலைக்கிராமங்கள், வீரலப்பட்டி, தா.புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதேபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, கொத்தயம் தேவத்தூர், 16 புதூர், கள்ளிமந்தயம் ஆகிய ஊராட்சிகளிலும் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் அந்தந்த தோட்டங்களில் மட்டை உரிக்கப்பட்டு பழனி, ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டது. விளைவு தேங்காய் உற்பத்தி பெருமளவில் குறைந்தது. இதன் காரணமாக தேங்காய் விலை உயர்வடைந்துள்ளது.
இதுகுறித்து சத்திரப்பட்டி பகுதி தேங்காய் விவசாயிகள் கூறுகையில், பருவமழை குறைந்ததால் தேங்காய் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி குறைந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மட்டை உரித்த தேங்காய் ஒரு டன் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தேங்காய் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து ஒரு டன் தேங்காய் ரூ.27 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.