அதிகாரி திட்டியதால், அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி - மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
அதிகாரி திட்டியதால் அங்கன்வாடி பணியாளர் தற்கொலைக்கு முயன்றார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 36). இவர் நத்தர்ஷா தெருவில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக உயர் அதிகாரி ஒருவர், இவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் பரமேஸ்வரியை அந்த அதிகாரி தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் திண்டுக்கல்- திருச்சி சாலையில் அண்ணா சிலை அருகே அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், அங்கன்வாடி பணியாளரை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர் களுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.