பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - பணிகள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2019-09-26 22:15 GMT
திருப்பூர், 

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரியும், ஆட்கள் குறைப்பை கைவிடக்கோரியும் வலியுறுத்தி 26-ந் தேதி, 27-ந் தேதி, 28-ந் தேதி ஆகிய 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.

அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.

திருப்பூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தலைமை அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில உதவி பொதுச்செயலாளர் முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர், கிளை தலைவர் வாலீசன், செயலாளர் குமாரசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை(சனிக்கிழமை) வரை வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல். கேபிள் பழுது சரிபார்ப்பு பணி, அலுவலக பணி, தூய்மைப்பணி, செல்போன் கோபுரம் பராமரிப்பு பணி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளது என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்