இழப்பீட்டு தொகை வழங்காமல் வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

இழப்பீட்டு தொகை வழங்காமல் வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-09-26 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே சாலையின் இருபுறமும் பொதுமக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அரசு சார்பில் இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் வீடுகளை இடிக்க நேற்று காலை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்துள்ளனர். இதில் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கையில் மண்எண்ணெய் கேன் மற்றும் தங்கள் குழந்தைகளுடன் வந்து அதிகாரிகளை கண்டித்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியவளையம் பிரிவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், முழு தொகை வழங்கப்பட்ட வீடுகள் மட்டுமே தற்போது இடிக்கப்படும். மற்ற வீடுகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய தீர்வு வழங்கப்பட்ட பின்னர் இடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினயிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்களுக்கு கட்டிடத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், மாற்று இடத்தையும் தந்தால் மட்டுமே நாங்கள் காலிசெய்ய அனுமதிப்போம். மீறி வீடுகளை இடித்தால் தங்களது குழந்தைகளுடன் சாலையில் தீக்குளிப்போம் என்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்