மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 60 லட்சம் மடிக்கணினிகள் இணைய சேவைக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு

மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 60 லட்சம் விலையில்லா மடிக்கணினிகளுக்கு இணைய சேவை வழங்க ரூ.1,800 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2019-09-26 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசு, இந்தியன் தொழில் கூட்டமைப்பு மற்றும் எல்காட் இணைந்து திருச்சியை ஐ.டி. உலகில் இணைப்பதற்கான கருத்தரங்கம் ‘சி.ஐ.ஐ. திருச்சி இ-கனெக்ட்-2019’ என்ற பெயரில் நேற்று திருச்சி சங்கம் ஓட்டலில் நடந்தது. திருச்சி சி.ஐ.ஐ. மண்டல சேர்மன் செய்யது ஆரீப் வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் சந்தோஷ்குமார் பாபு, எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள் குறித்து பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் 3 வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ரூ.8,800 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம் 50 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் இதுவரை இதுபோன்ற முதல்-அமைச்சரை கண்டதில்லை. தகவல் தொழில்நுட்ப துறைக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று ரூ.11 ஆயிரத்து 974 கோடி பெற்றுத் தந்துள்ளார்.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி.பூங்காக்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள், அங்கு உடனடியாக தொழில் தொடங்க முன்வரவேண்டும். தொழில் தொடங்க தயாராக இருப்பவர்களுக்கு தேவையான இடமும் வழங்கப்படும்.

முதல்-அமைச்சர் சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரை கவர்னர் இல்லத்தில் சந்தித்தபோது நிலம் எடுப்பு பணிக்கு ராணுவ இடத்தினை தரவேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி, திருச்சி விமான நிலைய விரிவாக்கப்பணிக்கும், திருச்சி ஜங்சன் உயர்மட்ட பாலம் அமைந்துள்ள பகுதிக்கும் ராணுவ இடம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை மாணவ-மாணவிகளுக்கு 60 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு இணைய சேவை வழங்கப்பட உள்ளது. அதற்காக கண்ணாடி இழை கேபிள் ( Opt-i-c-al Fi-b-er Ca-b-le) இணைப்பு வழங்கி, 12,524 கிராம பஞ்சாயத்துகள், 528 பேரூராட்சிகள், 120 நகராட்சிகள், 15 மாநகராட்சி பகுதிகளில் இணைய சேவை தொடங்கப்பட உள்ளது. கிராமத்திற்கு ஒரு சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரத் நெட் அமைப்பு திட்ட அறிக்கை தயார் செய்து கொடுத்ததில் மத்திய அரசு ரூ.1,800 கோடிக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த சேவை மூலம் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை பெறமுடியும். தொழில்நுட்ப கருவிகளை ஏற்றுமதி செய்ததில் 2017-18-ம் ஆண்டில் ரூ.1.27 லட்சம் கோடியும், 2018-19-ல் ரூ.1.39 லட்சம் கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை பொறுத்தவரை 2017-18-ம் ஆண்டில் 7 லட்சம் பேரும், 2018-19-ல் 7 லட்சத்து 37 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை அரசு முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு தனது விளக்க உரையின்போது கூறினார்.

மேலும் செய்திகள்